அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுக சார்பில் தொகுதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதிமுக சார்பில் புரட்சி பாரதம் கட்சிக்கு சீட்டு ஒதுக்காததால் அக்காட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
இதை தொடர்ந்து பூந்தமல்லி அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் உள்ள பூவை மு.மூர்த்தியார் திடலில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிமுகவுடனான கூட்டணியில் இடம் ஒதுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்காதது குறித்து நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே அதிமுகவுடனான கூட்டணி மேலும் தொடருமா என்பது குறித்து இரண்டொரு நாளில் முடிவு அறிவிக்கப்படும். புரட்சி பாரதம் கட்சி சார்பில் தனித்து போட்டியிடும் எண்ணம் இல்லை. மேலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமையுமா என கேட்டதற்கு நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.