தமிழ்நாட்டில் திமுக – அதிமுக இடையே தான் போட்டி எனவும், பாஜக ஜீரோ எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திமுக கூட்டணி தலைமையிலான செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், தவாக தலைவர் வேல்முருகன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன் கூறியதாவது,
“அமைச்சர் பன்னீர்செல்வம் நாம் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். கடந்த தேர்தலில் இரண்டு அமைச்சர்களும் பல நெருக்கடிகளை சந்தித்து நமக்காக பணியாற்றினார்கள். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஓய்வின்றி நமக்காக பணியாற்றி வருகிறார். அடுத்த 22 நாட்கள் கடலூர் விசிக உறுப்பினர்கள் திமுக கூட்டணியினரின் வழிகாட்டுதலில் பணியாற்ற வேண்டும். நானும் அதனை அப்படியே பின்பற்றுவேன். நான் உட்பட கட்சியினர் அனைவரும் வாக்கு சேகரிக்கும் பணியாளர்கள் மட்டுமே.
சமூகத்தில் இருக்கும் நல்லிணக்கத்திற்கு காரணமாக இருப்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நான் என்றும் தனிப்பட்ட நபர்களை பழித்து பேசியதல்ல. ஆனால் பாஜக இன்று அவர்களுக்கு எதிராக பேசினால் இந்துக்களுக்கு எதிராக பேசினார் என்று திரித்து பேசுகின்றனர். எந்த காலத்திலும் திருமாவளவன் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியதில்லை. அண்ணாமலை பேசியது போல சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக நான் இருந்தது இல்லை.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய அரசை கவிழ்த்தியவர்கள் பாஜக. அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். அப்படிப்பட்ட பாஜகவுடன் சமூகநீதி பேசும் கட்சிகள் கூட்டணி வைக்க முடியுமா? சமூக நீதிக்கு எதிரான கட்சி பாஜக- பாமகவுடன் எந்த காலத்திலும் விசிக கூட்டணி வைக்காது. அதிமுக திராவிட அடையாளத்துடன் நின்ற கட்சி. பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சி நீர்த்து போகும்.
தமிழ்நாட்டில் திமுக- அதிமுக இடையே தான் போட்டி. பாஜக ஜீரோ. நான் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக சென்றவுடன் நான் செய்த முதல் மனு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி உதவித்தொகைக்கான உச்ச வரம்பை உயர்த்தியது தான். பிற்படுத்தப்பட்டோரின் மருத்துவ இடங்களை பெற விசிகவும் ஒரு காரணம். எந்த காலத்திலும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக நான் ஒருநாளும் செயல்பட்டதில்லை. செயல்படப்போவதும் இல்லை. இந்தியாவின் ஒற்றை நம்பிக்கை ராகுல் காந்தி” இவ்வாறு தெரிவித்துள்ளார்.