ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர். பின்னர், மதிமுக பொதுச்செலாளர் வைகோவுடன் இணைந்து பயணப்பட்டார்.
ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
“ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
“மதிமுகவின் மூத்த நிர்வாகியும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினருக்கும், கணேசமூர்த்தி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
“ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கணேசமூர்த்தி குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
“மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான அ. கணேசமூர்த்தி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. மதிமுக கட்சி ஆரம்பித்த காலத்திருந்தே வைகோவுடன் இணை பிரியாமல் ஒரு போர்ப்படைத் தளபதியாக இருந்தவர் அ.கணேசமூர்த்தி.
ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், மதிமுக செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்
“மதிமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பாராளுமன்றத்தில் தொகுதி மக்களுக்காக குரல் கொடுத்தவர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்