0 0
Read Time:6 Minute, 0 Second

மயிலாடுதுறை: லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் சுதாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 18-வது லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு: ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு ஆட்சேபனைகள், எதிர்ப்புகளுக்கு இடையே பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் சுதாவின் வேட்பு மனுவை ஏற்க நாம் தமிழர் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இந்த எதிர்ப்புக்குப் பின்னரும் வேட்பு மனு ஏற்கப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் சார்பாக வழக்கு தொடரபப்ட இருக்கிறது.

நாம் தமிழர் ஆட்சேபனை: இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம் தங்கை காளியம்மாள் அவர்களின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதன் பிறகு எங்கள் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மதிப்பிற்குரிய சுதா என்பவரின் வேட்பு மனு பரிசீலனையின் போது நாம் தமிழர் கட்சி சார்பாக கடுமையான ஆட்சேபணைகளை நாங்கள் தெரிவித்தோம்.

7 ஆண்டு வருமான வரி தாக்கல் இல்லை: 2016 – 17 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்கள் ஏழு ஆண்டுகளாக வருமான வரி கணக்கு செலுத்தவில்லை என்பதோடு மட்டுமில்லாமல் தனது சொந்த வங்கி கணக்கில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகை கொண்டவராக இருக்கிறார். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி கணக்கினை செலுத்தாமல் பிழைகளுடன் கூடிய படிவம் 26 பூர்த்தி செய்து சத்திய பிரமாண பத்திரிக்கையாக அவர் தாக்கல் செய்த தவறை நாம் தமிழர் கட்சி சார்பாக சுட்டிக்காட்டினோம். எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் இது போன்ற தவறுகளை விசாரிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றத்தின் நாடிக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியது.

படிவம் 26-ல் பிழை- சிக்கல்: அப்படி என்றால் படிவம் 26 என்று சொல்லக்கூடிய சத்திய பிரமாணம் பத்திரிக்கையில் ( Affidavit) “மேற்சொன்ன விவரங்கள் அனைத்தும் உண்மையானது என்றும் சரியானது என்றும் உறுதி கூறி கையொப்பமிடுகிறேன்” என்ற சரிபார்ப்பு (Verification) இருக்கிறதே அதன் பொருள் என்ன என்பதை மீண்டும் நாங்கள் கேள்வி எழுப்பினோம்

வழக்கு தொடர ஆலோசனை: அதற்கு தேர்தல் ஆணையத்தின் அலுவலராக இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இது தொடர்பாக நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு எங்கள் ஆட்சேபணையை நிராகரித்து காங்கிரஸ் கட்சியின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார். நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து எங்களது நியாயத்தை எடுத்துக் கூறி இருக்கிறோம். நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் தலைவர் மூத்த வழக்கறிஞர் சேவியர் பிலிக்ஸிடம் இது குறித்து தெரிவித்து உடனடியாக வழக்கு தாக்கல் செய்ய கூறி இருக்கிறோம். தங்கை காளியம்மாள் பெயரில் , மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வேட்புமனு ஏற்க பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மிக விரைவில் நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு மணி செந்தில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %