சென்னையிலில் ரூபாய் 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் ரயிலில் ரூபாய் 4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, ரூபாய் 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் நெல்லை சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான நயினார் நாகேந்திரனின் விடுதியின் மேலாளரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், “எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. என் வெற்றியைத் தடுக்க மறைமுகமாக நெருக்கடி கொடுக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.