கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோதிடரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென்னம்பாக்கம் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் மரத்தின் நிழலில் ஒதுங்கியுள்ளார். அப்போது அங்கு அமர்ந்திருந்த கிளி ஜோசியர் ஒருவரிடம் நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேனா என்று கேட்டுள்ளார்.
‘என் கிளி கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என அனைத்தையும் தெளிவாக கூறி விடும்’ என தெரிவித்த கிளி ஜோதிடர், கூண்டில் இருந்த கிளியை வெளியே அழைத்து, தங்கர் பச்சான் பெயருக்கு சீட் எடுத்து தருமாறு கூறினார்.
அப்போது ஐய்யனார் சாமி இருக்கும் சீட்டு ஒன்றை எடுத்து போட்டுவிட்டு, அந்த கிளி கூண்டுக்குள் சென்றது. வெற்றி நிச்சயம்’ என கிளி ஜோதிடர் அடித்து கூற, ‘நமக்கு அய்யனார் ஆசீர்வாதம் வழங்கி விட்டார். இனிமேல் கவலையில்லை’ என, தங்கர் பச்சான் மகிழ்ச்சியாக வாகனத்தில் ஏறி பிரசாரத்தை தொடர்ந்தார்.
தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், அவருக்கு ஜோசியம் பார்த்தவரை வனத்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த கிளிகளையும் கைப்பற்றினர். கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.