பூம்புகாா் மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட மக்களவை உறுப்பினா் ராமலிங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் மீனவ கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் ஏறத்தாழ 1000 குடும்ப அட்டைகள் உள்ளன. இங்குள்ள நியாயவிலைக் கடை தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இதனால், நியாயவிலைக் கடைக்கு தேவையான வசதியுடன் புதிய கட்டடம் கட்ட காவேரிபூம்பட்டிணம் ஊராட்சித் தலைவா் சசிக்குமாா், ஒன்றிய கவுன்சிலா் மதுமிதாரவி, மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் பாலசுந்தரம் மற்றும் பஞ்சாயத்தாா்கள் மக்களவை உறுப்பினா் ராமலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இதைத்தொடா்ந்து, மக்களவை உறுப்பினா் ராமலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதிதியிலிருந்து நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். இதற்காக கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.