“சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல… வாழ்க்கையின் லட்சியம்” – ராகுல் காந்தி!
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல, வாழ்க்கையின் லட்சியம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து, இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்கு இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. இந்நிலையில் டெல்லி, ஜவஹர் பவன் உள்ள சமாஜிக் நியாய சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :
“சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல, அநீதி இழைக்கப்பட்ட 90 சதவீத மக்களுக்கு நீதியை உறுதி செய்வதே தனது வாழ்க்கையின் லட்சியம். காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும், பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியில் 90 சதவீத இந்தியர்களுக்கு ஒரு சிறு பகுதியை திரும்ப வழங்குவது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கமாகும்.
நாட்டில் உள்ள தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். பிரதமர் மோடி தள்ளுபடி செய்த பணத்தை தொழிலதிபர்களிடமிருந்து மீட்டு அதனை நாட்டில் உள்ள 90 சதவீத மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன். இதனை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளித்திருக்கிறோம்”
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.