0 0
Read Time:3 Minute, 53 Second

விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருப்பதாகவும், அவருக்கு பத்மபூஷன் விருதை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு கலைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024-ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கினார். விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து விருது பெற்ற விஜயகாந்த் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லி தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு விழாவை முடித்துக் கொண்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜய பிரபாகரன், தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினர். இவர்களை வரவேற்கும் வகையில் 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து “கேப்டன் கேப்டன்” என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் பிரேமலதா விஜயகாந்த் மீது மலர்கள் தூவி வரவேற்றனர்.

விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திறந்தவெளி வாகனம் மூலம் கோயம்பேட்டில் உள்ள அவருடைய நினைவிடம் வரை தொண்டர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

முன்னதாக பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

“மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட இந்த தேசிய விருதை முதலில் விஜயகாந்திக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும், விஜயகாந்தின் மீது அன்பு கொண்ட உலகத் தமிழர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த விருதை இரண்டாவதாக சமர்ப்பிக்கிறேன். விமான நிலையத்தில் வரவேற்பு அளித்த கட்சி நிர்வாகிகளுக்கு மிகவும் நன்றி. இந்த விருதை இங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள அவருடைய நினைவிடத்திற்கு கொண்டு சென்று அவருடைய காலடியில் இதை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

இந்த விருதை அவர் உயிருடன் இருந்து வாங்கி இருந்தால் மிகவும் பெருமையாக இருந்திருக்கும். மேலும் எல்லோரும் வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருக்கிறது. இந்த விருதை கொடுத்த மத்திய அரசுக்கு நான் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இந்த விருதை உரித்தாக்குகிறோம்” என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %