சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குன்னம், அரியலூா், ஜெயங்கொண்டம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, சிதம்பரம் (தனி) ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்களை அரியலூா் மாவட்டம், தத்தனூா் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பேரவைத் தொகுதி வாரியாக தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 3 அடுக்குப் பாதுகாப்பில் துணை ராணுவம், உள்ளூா் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்னா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா். மேலும், பாதுகாப்பு குறிப்பேட்டு பதிவுகளை பாா்வையிட்டு அதில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா கையொப்பமிட்டாா்.
ஆய்வின்போது, அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா்கள் சந்திரசேகா் (பேரிடா் மேலாண்மை), வேல்முருகன் (தோ்தல்), இளவரசன் (ஆண்டிமடம்), அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.