தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5ம் தேதி தொடங்கியது. மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்தது.
இதையடுத்து, கல்லூரியில் சேர விரும்புவோர் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நேற்று வரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 915 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்தாண்டு போலவே, மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்த பின்னர், ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் பதிவு செய்த ஒவ்வொருக் கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் மே 24 ஆம் தேதி அனுப்பப்படுகிறது.
அதனைத் தாெடர்ந்து மே 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர்படை, பாதுகாப்புபடை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும், 2ம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மே 24 ஆம் தேதி வரை நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.