0 0
Read Time:7 Minute, 20 Second

தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும், மக்களின் நன்மைக்காக செயல்படும் துறையாக, தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. மற்ற மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து 70 சதவீதம் தனியார் வசமும், 30 சதவீதம் அரசு வசமும் இருக்கும். ஆனால், தமிழ் நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளும் வகையில், சுமார் 80 சதவீதம் போக்குவரத்து வசதிகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறது.

அம்மாவின் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய பேருந்துகள் வாங்குவதும்; தமிழக மக்கள் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்ள, பேருந்துகளின் ஆயுட் காலத்தை குறைந்த அளவு வருடங்களாக நிர்ணயித்தும்; குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய பேருந்துகளை ஏலம்விட்டு, அதற்கு பதில் புதிய பேருந்துகளை வாங்கி, தேவையான ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்குகள் மற்றும் இதர ஊழியர்களை நியமித்தும், பொது போக்குவரத்தை மக்களின் வசதிக்காக இயக்கியது. போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தை அரசே ஈடு செய்தது. இவ்வாறு பொதுமக்களுக்கு சேவை செய்து சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது என பல்வேறு செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன.

30 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்களின் சேவைத் துறையாக, லாப நஷ்ட கணக்கு பாராமல் போக்குவரத்துத் துறை செயல்பட்டது. தேவைப்படும்போதெல்லாம் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனர். திமுக ஆட்சி ஏற்பட்ட இந்த 36 மாத காலத்தில், அவ்வப்போது புதிய பேருந்துகள் வாங்கப்படுவதாகவும், இ-பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் விடியா திமுக அரசின் அமைச்சர் அறிக்கை வெளியிடுகிறாரே தவிர, புதிய பேருந்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை. காலாவதியான பஸ்களை ஒட்டியே தீரவேண்டும் என்று ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின்போது, புதிய பேருந்துகள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதே தவிர, இதுவரை ஒரு பேருந்து கூட வாங்கப்பட்டதாக தெரியவில்லை.டயர் மற்றும் உதிரி பாகங்களை முறையாக கொள்முதல் செய்யாமல், பேருந்துகள் பழுது நீக்கப்படாமல், ஒட்டை-உடைசல் பஸ்கள் இயக்கப்பட்டு, இந்த திராவக மாடல் அரசு மக்களின் உயிரோடு விளையாடி வருகிறது. பஸ்களின் படிக்கட்டுகள் உடைந்து ரோட்டில் விழுகிறது. பேருந்துகளின் வீல்கள் தனியாக கழன்று ஓடுகின்றன. நடத்துனர் தன் இருக்கையோடு ஓடும் பஸ்சில் இருந்து சாலையில் விழுகிறார். பல பஸ்களில் இருக்கைகள் இருக்க வேண்டிய இடங்களில் பழைய டயர்களை போட்டு வைக்கிறார்கள்.

‘ஓசி’ பயணிகள் என்று ஆளும் கட்சியினரால் அழைக்கப்படும் மகளிர், அந்த டயர்கள் மீது அமர்ந்து பயணம் செய்வதாக செய்திகள் வருகின்றன.தற்போது, ஆங்காங்கே மழை பெய்யும் நிலையில், பேருந்துக்குள்ளேயும் மக்கள் குடைபிடிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களிலும், நகரப் பகுதிகளிலும் பிரேக்டவுன் ஆகி நிற்கும் பஸ்களை பயணிகள் தள்ளிச் செல்லும் காட்சிகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்றார் பேரறிஞர் அண்ணா. அதன் அர்த்தத்தை அனர்த்தமாக்கி தன் குடும்ப மக்கள் சேவைக்காக, விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், அரசு போக்குவரத்துத் துறையையே காவு வாங்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.உடனடியாக பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக இயக்க வேண்டும்.

நிதிப் பற்றாக்குறை என்ற பல்லவியை திரும்பத் திரும்ப பாடாமல் கடன் வாங்கிய 31/2 லட்சம் கோடியில், புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திட வலியுறுத்துகிறேன். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அவர்களின் உயிரோடு விளையாடாமல், அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை முறையே பழுதுபார்க்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் அச்சமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %