மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துப் பரிசுகள் வழங்கினர்.
தரங்கம்பாடி, மே- 22:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி எம்.புனிதவதி பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளின் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அசோக் தலைமையில் இலுப்பூர், சங்கரன்பந்தல் பொறையார் உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்கள் கூறி, இந்திய சுதந்திர போராட்ட வீரர் தியாகி திலகர் நினைவாக சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினர்.
சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ- மாணவிகள் மொத்தம் 103 தேர்வு எழுதினர். இதில் 90 பேர் தேர்ச்சி பெற்றனர் 87.38 சதவீதம் இப்பள்ளி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய இலுப்பூர் ஊராட்சி தெற்கு தெருவை சார்ந்த எம்.புனிதவதி என்ற மாணவி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தலா 100 மதிப்பெண் பெற்று மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவில் 493 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இலுப்பூர் ஊராட்சி தெற்கு தெருவை சார்ந்த பள்ளி மாணவி புனிதவதி குடிசை வீட்டில் மழை சாரலிலும் வெயிலிலும் தனது படிப்பு முக்கியம் என்று குறிக்கோளாகக் கொண்டு தனது பத்தாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்து சிறந்த மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவருக்கு கிராம மக்கள் மட்டுமன்றி பள்ளி மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் மேலும் மாணவியின் படிப்பிற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அசோக் தலைமையிலான குழுவினர் நிதி திரட்டி பள்ளி மாணவியின் படிப்பிற்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்