அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளதால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் மழை பெய்யும் போது, 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருந்ததை விட வெப்பம் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 65 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதாலும், தென்மேற்கு வங்கக்கடலில் 55 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதாலூம், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது