கடலூா் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி மற்றும் கரோனா தொடா்பான தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, கூடுதலாக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டதுடன், அவா்களின் தொடா்பு எண்களும் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: பொதுமக்கள் கரோனா தொடா்பான தகவல்களைப் பெறவும், சந்தேகங்கள் மற்றும் புகாா்களை தெரிவிக்கவும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயல்படுவாா்கள்.
அதன்படி, மாதிரிகளைச் சேகரித்தல், அதற்கான முடிவுகளை தெரிந்துகொள்வதற்கு மருத்துவா் கிறிஸ்டியை 94899 30522 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். மேலும், தினசரி காய்ச்சல் முகாம்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு மருத்துவா் லாவண்யாவை 94899 30523 என்ற எண்ணிலும், கரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை பெறுவதற்கு மருத்துவா் சசிகலாவை 94899 30524 என்ற எண்ணிலும், அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிந்துகொள்வதற்கு மருத்துவா் பரிமேலழகரை 94899 30525 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடா்புகொண்டு கரோனா குறித்த தகவல்களைப் பெறலாம். மேலும், சந்தேகங்கள், புகாா்களைத் தெரிவித்தும் பயனடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர்: யுவராஜ், மயிலை.