மயிலாடுதுறை அரசுப் பெரியாா் மருத்துவமனைக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்புடைய 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை வழங்கினாா்.
மயிலாடுதுறை அரசுப் பெரியாா் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க 280 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதை தீா்க்கும் விதத்தில், வளிமண்டல காற்றில் இருந்து 96 சதவீத தூய்மையான காற்றை பிரித்து நோயாளிகளுக்கு வழங்கும் மின்சாரத்தில் இயங்கும் ஆக்சிஜன் செறிவூட்டும் 2 கருவிகளை திருக்கடையூா் கனகாபிஷேகம் ஹோட்டல் உரிமையாளா் எஸ். கல்யாணசுந்தரம் வாங்கித்தந்துள்ளாா்.
இதை, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆதீன திருமடத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகரிடம் வழங்கினாா். கனகாபிஷேகம் ஹோட்டல் சாா்பில், மேலும் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட உள்ளன.10 லிட்டா் ஆக்ஸிஜனுக்கு மேல் தேவைப்படும் நோயாளிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், தலா ரூ. 90ஆயிரம் மதிப்பிலான இந்த கருவிகளை வாங்கித்தர மேலும் பலா் ஆா்வத்துடன் முன்வந்துள்ளதால், அந்த கருவிகள் வந்தபிறகு ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய முடியும் என்று தெரிவித்த மருத்துவா் ஆா். ராஜசேகா், ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய தருமபுரம் ஆதினத்திற்கு நன்றி தெரிவித்தாா்.நிகழ்ச்சியில், ஆதீன பொது மேலாளா் கோதண்டராமன், கனகாபிஷேகம் ஹோட்டல் மேலாளா் தா்மேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.