தவெகவின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாடு தேதி குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்காக அனுமதி கேட்டு கடந்த 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தனர்.
காவல்துறை சார்பில் மாநாடு நடத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கான பதிலினை விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் தவெக வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டிஎஸ்பி சுரேஷிடம் வழங்கினர்.
இந்நிலையில், மாநாடு நடத்துவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையை காரணங்காட்டி தமிழக அரசின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இதே வி. சாலை பகுதியில் தான் இந்தியா கூட்டணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்ற, விழுப்புரம் மற்றும் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிமுக மாநாடு நடத்தப்பட்டது என்கிற விவாதம் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அதன் தலைவரும் நடிகருமான விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 11.17 மணியளவில் மாநாடு தேதியை விஜய் அறிவிப்பார் என தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. த.வெ.க. மாநாட்டிற்கு காவல்துறை இன்னும் அனுமதி வழங்காத நிலையில் நாளை அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.