தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2A பணிக்கான தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் 7,93, 966 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில், 5,81,035 பேர் மட்டுமே எழுதினர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குரூப் 2-வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்களும், குரூப் 2ஏ-வில் உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்நிலையில் குரூப் 2 தேர்வின் வினாத்தாளின் பொது அறிவு பகுதியில், ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வி சர்ச்சையை கிளப்பியுள்ளது. வினாத்தாளில் 90வது கேள்வியாக அது கேட்கப்பட்டுள்ளது.
கூற்று A. இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறார்.
காரணம் (R). ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது.
A. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது.
B. கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) உள்ளது.
C. கூற்று (A) தவறானது. ஆனால் காரணம் (R) சரி.
D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.. ஆனால் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) இல்லை.
E. விடை தெரியவில்லை. என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாக திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல், திமுகவின் கொள்கைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்து வருகிறார். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பாடத் திட்டங்களையும் விமர்சித்தே வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வில் ஆளுநரின் அதிகாரம் குறித்து, இதுபோல கேள்வி வைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.