இன்று முதல் 29ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதன்காரணமாக வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. இதற்கிடையே, பெரும்பாலான இடங்களில் 102 டிகிரி முதல் 100 வரை வெப்பநிலை காணப்பட்டது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது.
அது மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் 29ம் தேதி வரை பெய்யும் வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசும். மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. வங்கக் கடல் பகுதியில், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.