கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக மாவட்ட செயலாளர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.
கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராமச்சந்திரன், சீமான் தொடர்ந்து கொள்கைகளில் இருந்து முரண்படுவதால் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர், ஒன்றிய, பகுதி செயலாளர்கள் என 20 பேர் விலகுவதாக அறிவித்தார். மேலும், சீமான் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் கொங்கு மண்டலத்தில் தங்களால் அரசியல் செய்யய முடியவில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளாக களத்தில் இருக்கும் தங்களை மக்கள் அந்நியமாகவே பார்க்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், திராவிட கட்சிகளுக்கு மாற்றுக்கட்சி, மாற்றத்திற்கான கட்சி என்பதாலேயே தாங்கள் நா.த.க வந்ததாகவும், ஆனால் மாற்றத்திற்கான அறிகுறியே தெரியவில்லை என்றும் ராமச்சந்திரன் குறிப்பிட்டார். அருந்ததியினர் குறித்த சீமானின் பேச்சு, அச்சமுக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதகவும், இது களத்தில் நிற்கும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் கூறினார்.
சீமான் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என்று நம்பிக்கையில் கடசிக்கு வந்ததாகவும், ஆனால அதை நோக்கிய பயணம் இங்கில்லை என்றும், அதனால் தான் தாங்கள் கட்சியிலிருந்து வெளியேறுவதாகவும் ராமச்சந்திரன் தெரிவித்தார். கட்சியின் கொள்கைக்கும் சீமானின் நடவடிக்கைகளுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளதகவும், கடந்த ஓராண்டாக பிரச்சினை உள்ள நிலையில் அடுத்தக்கட்ட தலைவர்கள் பிரச்சினையை கேட்டு தீர்க்கவில்லை. இதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.