0 0
Read Time:3 Minute, 54 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் அரசு மருத்துவமனைகளில் விரைவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு, காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கூறும்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் 1250 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 730 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, சீர்காழி அரசினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 350 பேரில் 40 பேருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 150 பேர் கொரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 400 படுக்கைளில் சிகிச்சை அளிக்க கோரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் லிக்யூடு ஆக்சிஜன் டேங்க் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இது செயல்பாட்டுக்கு வந்தால் 150 ஆக்சிஜன் படுக்கை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக இதுவரை 35 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க காவல்துறை, வருவாய்துறையினர் அடங்கிய பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இன்றிலிருந்து ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், காவல்நிலைய எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %