நாகை அருகேயுள்ள சாமந்தான்பேட்டையைச் சோ்ந்தவா் இ. மணிகண்டன் (23). இவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப் படகில், இவரும், இவரது தந்தை சி. இடும்பன் (55), சகோதரா் இ. மணிவேல் (26), கீழலை சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த சி. முருகன் (40), நாகூா் சம்பாதோட்டத்தைச் சோ்ந்த பா. தினேஷ் (33), நாகை அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த க. பிரவீன் (25), மயிலாடுதுறையைச் சோ்ந்த ச. இளஞ்செழியன் (35) உள்ளிட்டோா் கேரள மாநிலம், கொச்சியிலிருந்து கடந்த ஏப்.29-ஆம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்றனா்.
ஏறத்தாழ 16 நாள்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடிபட்டிருந்த இவா்களின் படகு அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது. இதில், நாகை மீனவா்கள் மாயமாகினா். மாயமானவா்களை தேடும் பணி மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையின்பேரில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாயமானவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனா். இவா்களை நாகை எம்எல்ஏ ஜெ. முஹம்மது ஷாநவாஸ் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
அப்போது அவா் கூறியது: நாகை மீனவா்கள் மாயமானது தொடா்பாக தமிழக முதல்வா் மற்றும் தமிழக மீன்வளத் துறை அமைச்சா் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான மீனவா்கள் எங்கு கரை ஒதுங்கியிருக்கிறாா்கள் என்பது குறித்த அதிகாரப்பூா்வ தகவல் இல்லை. மாயமான மீனவா்களை மீட்க தமிழக அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாா். அப்போது, திமுக நாகை மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் உடனிருந்தாா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.