சென்னை: காங்கிரஸ் காங்கியின் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் வயது முப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. சென்னை சாலிகிராமம் வீட்டில் உயிரிழந்த துளசி அய்யா உடல் சொந்தஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பூண்டியில் இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, என டெல்டா மாவட்டங்களில் எங்கு நோக்கினும் பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கென தனிபெரும் செல்வாக்கை காண முடியும். அதிகாரத்தாலோ, மிரட்டல் உருட்டலாலோ இந்த மரியாதையும், மதிப்பும் வாண்டையார் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. மாறாக அன்பாலும், கருணையாலும் மக்களின் இதயங்களை கவர்ந்து தந்தையும், மூதாதையரும் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை தக்க வைத்தனர்.
மகாத்மா காந்தியின் சீடராக வாழ்ந்து வரும் பூண்டி துளசி வாண்டையார் காங்கிரஸ் கட்சி சார்பில் 1991-1996-ம் காலகட்டத்தில் தஞ்சை மக்களவை தொகுதி உறுப்பினராக பதவி வகித்தார். இவர் எம்.பி.யாக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு மத்திய அரசு வழங்கிய எந்த சலுகையையும் ஏற்காதவர். விமான டிக்கெட், ரயில் டிக்கெட், காருக்கு டீசல் என ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும் வேண்டாம் என உதறித்தள்ளி தனது சொந்த நிதியின் மூலம் டெல்லி சென்று வருவதற்கான செலவுகளை கவனித்துக்கொண்டவர். அரசியல், விவசாயம், சமூகப்பணி, இலக்கியம் என பலதுறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடும் அறிவும் அனுபவமும் உடையவர் இவர். அந்தக் காலத்திலேயே சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கு சொந்தமாக பல நூறு ஏக்கர்களில் விளைநிலங்கள் உள்ளன.
பூண்டியில் ஏ.வி.வி.எம்.ஸ்ரீ புஷ்பம் கலை அறிவியல் கல்லூரி நடத்தி வரும் வாண்டையார் குடும்பம் வருடத்திற்கு குறைந்தது ஆயிரம் மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளித்து வருகிறது. 60 ஆண்டுகளை கடந்த பழம்பெருமை மிக்க ஸ்ரீ புஷ்பம் கலை அறிவியல் கல்லூரியில், இதுவரை ஒரு ரூபாய் கூட எந்த மாணவர்களிடமும் நன்கொடை பெற்றதில்லை. கல்வி வள்ளலாக திகழ்ந்து வந்த பூண்டி துளசி வாண்டையார் ஆயிரமாயிரம் ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர். விவசாய கூலிகள், ஏழை எளியோர் வீட்டு பிள்ளைகள் பலர் இன்று உயர் பதவிகளில் ஜொலிக்க பூண்டி துளசி வாண்டையாரின் இதயத்தில் கசிந்த கருணையும், அன்புமே காரணம் என பெருமிதம் தெரிவிக்கிறார்கள் தஞ்சை பகுதி மக்கள்.
93 வயதான துளசி வாண்டையார் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பூண்டியில் இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.