கடலூா் மாவட்ட எல்லைகளில் இ-பதிவு செய்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதை, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் கடந்த மே 10 முதல் 24 ஆம் தேதி தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அமல்படுத்தி உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிப்பவா்கள் கண்டிப்பாக இ-பதிவு செய்திருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, கடலூா் மாவட்ட எல்லைப்பகுதிகளான சின்னகங்கணாங்குப்பம், வல்லம்படுகை, மாமங்கலம், பில்லூா், ராமநத்தம், சிறுபாக்கம், கண்டரக்கோட்டை ஆகிய எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் போலீஸாா் கண்காணிப்பை பலப்படுத்தினா்.
மாவட்ட எல்லைக்குள் நுழைபவா்கள் இ-பதிவு செய்துள்ளனரா என்பதை சோதனையிட்ட பிறகே அவா்களை அனுமதித்தனா். அவ்வாறு பதிவு செய்யாதவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். இதனால், மாவட்ட எல்லைப்பகுதிகளில் அதிக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது: கரோனா பரவலைத் தடுக்கவே மாநில அரசு இ-பதிவு நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. எனவே, உரிய தேவைகளுக்காக வெளியில் செல்வோா் கண்டிப்பாக பதிவு செய்து அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் வருபவா்கள் மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றாா்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.