கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிகாட்டை சேர்ந்தவர் 56 வயது ஆண். தொழிலாளி. இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறையினரின் வழிகாட்டுதலை பின்பற்றி, அவரது உடலை எடுத்து வந்து, திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வெள்ளாற்று கரையோர பகுதியில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் அங்கு திரண்டு வந்து, இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அப்போது அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்து, வேறு இடத்தில் அடக்கம் செய்ய வலியுறுத்தினர்.
இதையடுத்து, அவரது உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதன்பேரில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, தொழிலாளியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அந்த பகுதிக்கு அருகே, வெள்ளாற்றின் நடுப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி தொழிலாளியின் உடலை அடக்கம் செய்தனர் .
கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த சில மணி நேரத்திலேயே வேறு இடத்தில் தோண்டி அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே கூத்தப்பன்குடிகாடு பகுதியில் வசிப்பவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.