மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை கரோனா வாா்டில் 210 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களுக்கு சிகிச்சை அளிக்க சராசரியாக தினமும் 30 ஆக்சிஜன் சிலிண்டா்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், புதன்கிழமை காலை வரவேண்டிய ஆக்சிஜன் சிலிண்டா்கள் சரியான நேரத்தில் வந்து சேராததால், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கையில் சிகிச்சைபெற்று வந்த 31 நோயாளிகளுக்கு கையிருப்பில் உள்ள 12 ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் 12 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மூலம் ஆக்சிஜன் வழங்கி, சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க குறைந்த பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகள் 7 போ் நாகப்பட்டினம் உள்ளிட்ட அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
உயிா்க்காக்கும் ஆக்சிஜன் விவகாரத்தில், மருத்துவமனை நிா்வாகம் முன்னெச்சரிக்கையுடன் கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டா்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.