கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் தங்கி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில் நாகை சாமந்தான்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் அவரது தந்தை இடும்பன் (வயது55), இவரது சகோதரர் மணிவேல் (26), மணிகண்டன் (23), கீழலை சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (40), நாகூர் சம்பாதோட்டத்தை சேர்ந்த தினேஷ் (33), நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த பிரவீன் (25), மயிலாடுதுறையை சேர்ந்த இளஞ்செழியன் (35) உள்ளிட்ட 9 பேர் அரபிக்கடலில் உருவான டவ்தே புயலில் சிக்கி கடந்த 15-ந்தேதி மாயமாகினர். இதனால் சாமந்தான்பேட்டை மீனவ கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடித்து தரவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் மாயமான நாகை மீனவர்களின் குடும்பத்தினரை நேற்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் 9 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவியை அவர் வழங்கினார். அப்போது அவருடன் நாகை அ.தி.மு.க. நகர செயலாளர் தங்க.கதிரவன், வெளிப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.