0 0
Read Time:5 Minute, 26 Second

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன. விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல. ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப்பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச்செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர். சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும், விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள்நாட்டுப்போரை நடத்தி நச்சுக்குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்தபோதும் சிங்கள மக்கள் மீது சிறுதாக்குதல் கூடத் தொடுக்காது மரபுவழிப் போரையே இறுதிவரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்தபோதும் அறவழிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப்புலிகளின் மாண்பைப் பேசாது அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக்கூட்டம் போலக் காட்ட முயலும் இத்தொடரை இணையவெளியில் ஒளிபரப்புவதை ஒருநாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

Image
Image
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %