வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கடலூா் கேப்பா்மலையில் உள்ள ராமாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 500 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வீசிய சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுமாா் 10 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்தன. இதேபோன்று, தொடா் மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் கதிரோடு சாய்ந்தன. இதனால், அறுவடை இயந்திரம் மூலமாக நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதிப்பு குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். சேத்தியாத்தோப்பில் 10 செ.மீ. மழை: மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்): சேத்தியாத்தோப்பு 100.2, சிதம்பரம் 62.8, பண்ருட்டி 56, லால்பேட்டை 32.8, மேமாத்தூா், விருத்தாசலம் தலா 28, குடிதாங்கி 27.5, பரங்கிப்பேட்டை 19.8, வானமாதேவி 17, வேப்பூா் 16, லக்கூா் 14.1, அண்ணாமலை நகா் 12.8, காட்டுமன்னாா்கோவில் 12, குப்பநத்தம் 10.4, கடலூா், காட்டுமைலூா் தலா 10, மாவட்ட ஆட்சியரகம், ஸ்ரீமுஷ்ணம் தலா 9.3, புவனகிரி, தொழுதூா் தலா 7, கீழச்செருவாய் 5, கொத்தவாச்சேரி 4, பெலாந்துறை 3.8, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து தலா 2 மி.மீ. மழை பதிவானது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.