கடலூர் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வீசிய சூறைக்காற்று மற்றும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்து விட்டன. கொரோனாவால் சந்தைகள் முடங்கியதால் வாழைத்தார் வணிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சூறைக்காற்றில் வாழைகள் சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது. சூறைக்காற்றில் பெரும்பான்மையான வாழைகள் சாய்ந்து விட்டதால் கிடைத்து வந்த சொற்ப வருமானமும் பறிபோய் விட்டது. வாழையை பொறுத்தவரை ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் துயரத்தை தமிழக அரசு தான் துடைக்க வேண்டும்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு சூறைக்காற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அதனடிப்படையில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கி, விவசாயிகளின் துயரத்தை தமிழக அரசு துடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.