வேதாரண்யம் நகராட்சியின் அனுமதி பெற்று 21 வார்டுகளிலும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீடுதோறும் சென்று விற்பனை செய்யலாம் என நகராட்சி அறிவித்துள்ளது.இன்று முதல் வருகிற 31ம் தேதிவரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பொதுமக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் கிடைக்கும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் வர்த்தக சங்கம், வணிகர் சங்கம் ஆகிய பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. ஆய்வாளர் வெங்கடாசலம், வர்த்தக சங்க, வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டு உரிய அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை பெற்று இன்று (திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படும் முழு ஊரடங்கு உத்தரவின்போது பயன்படுத்திக் கொண்டு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யலாம். விற்பனை செய்பவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும், வீடு, வீடாக சென்று விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து செல்ல வேண்டும் என நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கேட்டுக்கொண்டார்.