மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொரோனா வார்டில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு மகளிர் விடுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து சித்த மருத்துவ மூலிகைகளையும், மருந்துகளையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான படுக்கைகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 50 படுக்கைகள் உள்ளன. கொரோனா தொற்று ஆரம்ப அறிகுறி உள்ளவர்கள் இங்கே அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் பிளான்ட் நிறுவப்பட்டுள்ளது. சில குறைபாடுகள் விரைவில் களையப்பட்டு ஒரு வாரத்திற்குள் ஆக்சிஜன் பிளான்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதன் பிறகு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் அதில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 28 செவிலியர்களுக்கு கொரோனா நோய் பரவல் ஏற்பட்டதாக அறிந்தேன். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். செவிலியர் பற்றாக்குறையை போக்க புதிதாக செவிலியர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார். அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் அரசு டாக்டர்கள், அரசு அதிகாரிகள் இருந்தனர்.