பாபா ராம்தேவுக்கு ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு இந்திய மருத்துவ கழகம் அவதூறு நோட்டீஸ்!.
பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அறிவுறுத்தலின்பேரில் அவர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்தநிலையில், டாக்டர்களின் சங்கமான இந்திய மருத்துவ கழகத்தின் உத்தரகாண்ட் மாநில செயலாளர் அஜய் கன்னா சார்பில் பாபா ராம்தேவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பின்வாறு கூறப்பட்டுள்ளது.
அலோபதி மருத்துவத்துக்கு எதிரான உங்கள் கருத்து, இந்திய தண்டனை சட்டப்படி குற்றச்செயல் ஆகும். எங்கள் அமைப்பில் உள்ள 2 ஆயிரம் டாக்டரின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் நீங்கள் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் உறுப்பினர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1,000 கோடி இழப்பீடாக கேட்போம். மேலும், கொரோனாவுக்கு உங்கள் நிறுவனம் தயாரித்த ‘கொரோனில் கிட்’ மருந்து தொடர்பான விளம்பரத்தை வாபஸ்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.