சீா்காழி வட்டம் கொள்ளிடம் அருகே அலையாத்திக் காட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான சாராய ஊரல்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழித்தனா்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளா்வுகளற்ற பொதுமுடக்கம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அருகே உள்ள கோட்டைமேடு அலையாத்திக் காடுகள் பகுதியில் சிலா் சாராய ஊரல் போட்டு இருப்பதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதாவிற்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து, புதுபட்டினம் காவல் ஆய்வாளா் சந்திரா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அலையாத்திக் காடுகள் நடுவே 7 பேரல்களில் சாராய ஊரல்கள் மறைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்து அவற்றை அழித்தனா். அவற்றின் மதிப்பு ரூ.1லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சாராய வியாபாரியை தேடி வருகின்றனா்.