கோயில் அர்ச்சகர்கள், பூஜாரிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை-இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!
இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயில்களில் நடைபெறவேண்டிய நித்யபடி பூஜைகள் மற்றும் பாரம்பரிய விழாக்கள் பக்தர்களின்றி தொடர்ந்து நடந்து வருகிறது. பூஜைகள் செய்வதற்காக தினந்தோறும் அர்ச்சகர்கள், பூஜாரிகள் மற்றும் கோயில் பணியாளர்களான ஓதுவார்கள், பரிசாரகர்கள், நாதஸ்வர கலைஞர்கள், மாலை கட்டுவோர், தூய்மை பணி செய்வோர், காவலாளிகள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் தங்களது வீடுகளிலிருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்க கோயில் பணியாளர்கள் வெளியில் வருவதால் மிக எளிதாக கொரோனா தொற்றிற்கு ஆளாகி பாதிக்கப்படுகின்றனர். மேலும் காவல்துறையினரால் தடுக்கப்படுகின்றனர். தடையின்றி கோயில் பூஜைகளுக்கு செல்லும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை காவல்துறைக்கு அரசு வழங்க வேண்டும்.
இந்துசமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்கள் மூலம் உணவு தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதற்கான தயாரிப்பு மற்றும் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபடும் கோயில் பணியார்களுக்கு உரிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. கோயில் அர்ச்சகர்கள், பூஜாரிகள் போதிய வருமானமின்றி மிகுந்த கஷ்டத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். கர்நாடக அரசு அம்மாநிலத்தில் உள்ள கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது. இது போல தமிழக அரசும் அர்ச்சகர்கள் மற்றும் கிராம கோயில் பூஜாரிகள், கோயில் பணியாளர்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் காலம் வரை மாதந்தோறும் நிவாரண உதவி வழங்க வேண்டும் .அர்ச்சகர்கள், பூஜாரிகள் மற்றும் கோயில் பணியாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்து கொரோனா வைரஸ் தொற்றால் அவர்கள் இறக்க நேரிட்டால் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: சுவாமி, கொள்ளிடம்.