தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்த நோய் தொற்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பால், மருந்தகம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஓட்டல்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மணல்மேடு கடைவீதி, பஸ் நிலையம், கடலங்குடி, வில்லியநல்லூர், பட்டவர்த்தி, வக்காரமாரி பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் மணல்மேடு பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜனனிபிரியா ஆகியோர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவர்கள், தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களின் 90 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
நிருபர்: யுவராஜ், மயிலை.