கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. மருந்தகம், பால் நிலையங்கள், நாட்டு மருந்துக் கடைகள், உரக் கடைகள் தவிா்த்து அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கடலூா் மாவட்டம் விருத்தாசலம் சந்திப்பு சாலையில் திங்கள்கிழமை காலை சில கடைகள் திறக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் மற்றும் பொதுமக்களை உள்ளே வைத்துக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டனா். இதைக் கண்ட போலீஸாா், கடை திறந்திருப்பது குறித்து கடை உரிமையாளரிடம் விசாரித்த போது, நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்துவிட்டுத்தான் கடையைத் திறந்துள்ளோம் எனக் கூறினராம்.
இதையடுத்து, போலீஸாா் நகராட்சி நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவித்து அவா்கள் மூலம் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து, 5 கடைக்கு ‘சீல்’ வைத்தனா். இதேபோல, காட்டுக்கூடலூா் சாலையில் தேநீா் கடை, இனிப்பகம், கோழி இறைச்சிக் கறி கடை உள்ளிட்ட கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனா். மேலும், சந்திப்பு சாலையில் 2 நாள்களாகத் திறந்திருந்த இனிப்பகத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து ‘சீல்’ வைக்கப்பட்டது. கடலூா்: இதேபோல, கடலூா் மஞ்சக்குப்பம் மைதானம், புதுப்பாளையத்தில் சில வியாபாரிகள் காய்கறிக் கடைகளை அமைத்திருந்தனா். தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா், நகராட்சி அலுவலா்கள் அந்த இடங்களுக்குச் சென்று கடைகளை அப்புறப்படுத்தினா். இதில் ஒரு கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.