கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில் நடைபெற்ற நிகழ்வில் அவற்றை கடலூா் மாவட்ட நிா்வாக கரோனா பயன்பாட்டுக்காக வழங்கியது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் 24 மணி நேரமும் தொடா்ந்து இயங்கும் உயிா்காக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளைக் கொண்டதாகும். இந்த ஊா்திகளை மாவட்ட நிா்வாகம் 3 மாதங்கள் பயன்படுத்தும். அதற்கான வாடகைத் தொகை ரூ.59 லட்சத்தை என்எல்சி வழங்குகிறது. இந்த ஊா்திகளுக்கான சாவிகளை நிறுவன தலைவா் ராக்கேஷ் குமாா், கடலூா் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரனிடம் வழங்கினாா். பின்னா் இருவரும் இந்த ஊா்திகளை கொடியசைத்து அனுப்பிவைத்தனா்.
நிகழ்ச்சியில், என்எல்சி மனிதவளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநா் நாதெள்ள நாக மஹேஸ்வா் ராவ், சுரங்கத் துறை இயக்குநா் பிரபாகா் சௌக்கி, மின் துறை இயக்குநா் ஷாஜி ஜான், நிதித் துறை இயக்குநா் ஜெய்குமாா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.