கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பெரியாா் நகரில் தனியாா் திருணம மண்டபத்தின் முன்பக்கக் கதவை பூட்டிவிட்டு, பின்பக்கக் கதவு திறக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்த போது, உள்ளே சுமாா் 100 போ் அமா்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். இதையடுத்து, அங்கிருந்தவா்களை வெளியேற்றிய போலீஸாா் அந்த மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்தனா். மேலும், அங்கு திறக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கடை, மாா்க்கெட் தெருவில் கோழி இறைச்சிக் கடை, 2 காய்கறி கடைகள், இனிப்பகம் உள்பட 10 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா். இதேபோல, கடலூா் வண்ணாரப்பாளையம் பட்டாதோப்பு நகரில் தனியாா் நிதி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், கடலூா் புதுநகா் காவல் உதவி ஆய்வாளா் எழில்தாசன், நகராட்சி வருவாய் ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று நிதி நிறுவனத்திலிருந்த ஊழியா்களை எச்சரித்து வெளியே அனுப்பினா். பின்னா், அந்த நிதி நிறுவனத்தைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
நிருபர்: அருள்மணி, கடலூர்.