சீா்காழியை அடுத்த திட்டை பகுதியை சோ்ந்தவா் ராம்குமாா் (43). இவா் இந்திய வன உயிரின அறக்கட்டளையின் முன்னணி ஆய்வாளராக இருந்தாா். இந்திய வன உயிரின அறக்கட்டளையும், இந்திய அரசின் யானைகள் திட்டமும் (பிராஜக்ட் எலிபேண்ட்) இணைந்து இந்தியா முழுவதும் உள்ள யானைகளின், வலசைப் பாதைகளை கண்டறிந்து ஆவணப்படுத்திய பணியில் முக்கிய பங்காற்றியவா். இது ‘ரைட் ஆப் பேசஜ்’ எனும் ஆவண நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள 108 வலசைப் பாதைகளின் வரைபடங்களையும்ஆவணப்படுத்தியதில் ராம்குமாரின் பங்களிப்பும் உள்ளது. மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் வன உயிரின அறிவியலில் பட்ட மேற்படிப்பு முடித்து, கோவை வனக் கோட்டத்தின் நில அமைப்பு, யானைகளின் வாழ்விடம், வலசைப் பாதைகள், யானை- மனிதன் முரண்பாடு ஆகியவை உள்ளடக்கிய ஆய்வில் முனைவா் பட்டம் பெற்றவா்.
இந்திய வன உயிரின அறக்கட்டளை இந்தியாவில் உள்ள யானைகளின் வலசைப் பாதைகளை காப்பாற்றுவதில் பெரும் பணியாற்றுகிறது. தனியாா் வசமுள்ள சில வலசைப் பாதைகளை விலை கொடுத்து வாங்கி அதனை யானைகளுக்காக மீட்டுக் கொடுக்கும் பணியை அந்த அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா். இவ்வாறு கேரளத்தின் வயநாடு மற்றும் கா்நாடகத்தின் சில வலசைப் பாதைகள் மீட்டெடுக்கப்பட்டன. அந்த பாதைகளை மீட்டெடுத்ததில் ராம்குமாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. பல ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வந்த ராம்குமாா் சில நாள்களுக்கு முன்னா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.