மின் கட்டணம் செலுத்த இறுதி நாள், மே 10 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை உள்ள நுகர்வோர், ஜூன் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த மின்நுகர்வோரின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் மே 31-ஆம் தேதி வரை இருக்குமாயின், அத்தொகையை ஜூன் 15-ஆம் தேதி வரை மின் துண்டிப்பு, மறு இணைப்புக் கட்டணமின்றி செலுத்த அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது மே 31-ஆம் தேதி வரை மட்டுமே முழு பொதுமுடக்கம் அமலில் இருந்தது. பின்னர், ஜூன் 7-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டு, ஜூன் 7-ஆம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நுகர்வோருக்கும், ஜூன் 15-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வருவாய்ப் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அனைத்துக் கண்காணிப்புப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: ஜூன் 7-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வழுத்த மின் நுகர்வோர் எதிர் கொள்ளும் சிரமத்தைத் தவிர்க்கும் பொருட்டு, ஜூன் மாதத்துக்கான கட்டணத்தை, பிஎம்சி என்னும் முந்தைய மாத பயனீட்டு அளவுக்கான கட்டண வசூல் குறித்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி வசூலித்துக் கொள்ளலாம். இந்த நடைமுறை அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.
அதே போல், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள், மே 10 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை உள்ள மின் நுகர்வோருக்கு, மின்துண்டிப்பு, மறு இணைப்புக் கட்டணமின்றி, ஜூன் 15-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.