தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது, இதனால் தமிழக அரசு காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை அரசு அனுமதி பெற்று நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யலாம் என அறிவித்தது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உழவர் சந்தை எதிரே மாதிரவேளூர் கிராமத்தை சேர்ந்த நெப்போலியன் என்பவருக்கு சொந்தமான வேனில் சீர்காழி நகராட்சியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பதற்காக அனுமதி பெற்று காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்தநிலையில் நேற்று காலை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து வந்த ஆம்னி வேனில் அடிப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே விற்பனையாளர்கள் வாகனத்தில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் சீர்காழி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.