கொரோனா தடுப்பூசியில் “சாத்தானின் முத்திரை பதித்த சிப் வச்சிருக் காங்க. போட்டுக்காதீங்க” என சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை “ஏஞ்சல்” என்ற கிறிஸ்தவ மதபிரச்சார தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பு செய்துள்ளது. இந்த வீடியோவை வெளியிட்ட “ஜீஸஸ் மினிஸ்ட்ரிஸ்” என்ற அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சாதுசுந்தர் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சீர்காழி காவல் ஆய்வாளரிடம் இன்று 08.06.2021 செவ்வாய்க்கிழமை இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.
தடுப்பூசியில் “சாத்தானின் முத்திரை உள்ளது. விலகி ஓடுங்கள்” என்ற தலைப்பில் யூடியூப் வீடியோ ஒன்றினை பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் அந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி போட்டு கொண்டிருக்கும்போது “தடுப்பூசியில் சாத்தானின் முத்திரை பதித்த சிப் வச்சிருக்காங்க. போட்டுக்காதீங்க.” என்று அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.
ஏஞ்சல் என்ற தனியார் தொலைக்காட்சி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இருப்பவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். அவரது பெயர் சாதுசுந்தர் செல்வராஜ்.” ஜூஸஸ் மின்ஸ்ட்ரிஸ் ” என்ற கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனராக உள்ளார்.
அந்த வீடியோவில் ஒரு வீட்டில் தாயும் மகனும் டீவியில் ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதில் சாது சுந்தர் செல்வராஜ் பேசுகிறார். அதை கேட்ட அந்த தாய், “சாத்தானுடைய முத்திரை பதித்த சிப் வைக்கிறாங்களாம். அதனால், அந்த தடுப்பூசி நாம போடக்கூடாதாம். அதத்தான் தாத்தா சொல்லிட்டு இருக்கிறாரு” என்று மகனிடம் விவரிக்கிறார்.
அதன் பிறகு, தடுப்பூசி போடும் இடத்துக்கு மகனுடன் அந்த தாய் செல்கிறார். அப்போது அவருக்கு ஒரு குரல் கேட்கிறது.”அந்த ஊசியை நீ நன்றாக கவனித்துப் பார். அது வெறும் தடுப்பூசி மட்டுமல்ல. அதற்குள்ளே சாத்தானின் முத்திரை மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மிருகத்தின் முத்திரையை நீ தரித்துக்கொண்டால் பரலோக ராஜ்ஜியத்தை பிரவேசிக்க முடியாது” என்று அந்த குரல் சொல்கிறது.இதையடுத்து அந்த பெண், “ஆண்டவரே.. ஐயோ.. யாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்காதீங்க. நமக்கு யேசப்பா பைபிள்ள சொன்னமாதிரி இந்த ஊசில சாத்தானின் முத்திரை இருக்கிறது” என்று கத்துகிறார். இதைக்கேட்டு ஒரு டாக்டர் “ஜஸ்ட் ஒரு சிப் தான்” என்று சொல்ல” அந்த சிப்தான் போடக்கூடாதுன்னு” அந்த பெண் சொல்கிறார். அதற்கு டாக்டர்” உங்க நன்மைக்காகத்தான் சிப் வைக்கப்படுகிறது. ஏன் பதட்டப்படுறீங்க” என்று சொல்கிறார்.
” ஐயோ கடவுளே, யாரும் நம்பமாட்டேங்றாங்களே நான் என்ன செய்யறது” என்று அந்த பெண் புலம்புகிறார்.
அப்போது “இதில் இருந்து விலகி ஓடுங்கள் என்று எச்சரிக்கிறேன்” என்று ஒரு குரல் வர “இந்த ஊசியை போடமுடியாது என்று அந்த பெண் தன் மகனுடன் அங்கிருந்து ஓடிவிடுகிறார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நாடு முழுவதும் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு அவதூறு பரப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில் கிறிஸ்தவ அமைப்பின் இந்த வீடியோ அரசின் முயற்சிக்க அரசுக்கு எதிரானதாக உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து மக்களிடையே பீதியை உண்டாக்கும் கிறிஸ்தவ பாதிரியார் சாது சுந்தர் செல்வராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.