மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து, பாதபூஜை செய்து மரியாதை செலுத்தி, கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் விதமாக சானிடைசர், கையுறை மற்றும் முகக்கவசங்களை வழங்கினர்.
கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகம் இருப்பதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களிலும், தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் 22-ஆம் தேதி வரவுள்ள நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் பாதபூஜை செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாயூரநாதர் வடக்குவீதியில் உள்ள நகராட்சி கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, விஜய் மக்கள் மன்ற மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமை வகித்து, மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 55 பேருக்கு 500 முகக்கவசங்கள், 300 கையுறைகள் மற்றும் 100 சானிடைசர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியை, அவ்வியக்கத்தின் மாவட்ட மாணவரணி தலைவர் பிரபஞ்சன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தியாளர் – கிருஷ்ணகுமார்