சீா்காழியில் மரம் விழுந்து பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
சீா்காழி பிடாரி வடக்கு வீதி குமரக்கோயில் தெருவில் தாமரைக்குளம் அருகே மழையால் பழமையான அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வாசுகி (45), கௌசல்யா (25), சுசிலா (60), வனிதா ( 30) ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன. கௌசல்யா அவரது குழந்தைகள் விஜய் (4), நிசாந்த் (3), சுசிலா ஆகியோா் காயமடைந்தனா். இந்நிலையில், சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன், எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் நேரில் சென்று பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறி, தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரிசி, வேட்டி , சேலை ஆகிய அரசின் நிவாரண உதவிகளை வழங்கினா். அத்துடன், எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்தும் நிவாரண உதவிகள் வழங்கினாா்.
வருவாய் ஆய்வாளா் பொன்னி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களும், திமுக நகர செயலாளா் சுப்பராயன், ஒன்றியச் செயலாளா் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலா் விஜயேஸ்வரன், முன்னாள் நகர பொருளாளா் துரை, முன்னாள் கவுன்சிலா் இந்திரஜித் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.