கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 14 (அதாவது நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி (நேற்று) முதல் 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.
அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக அழகு நிலையங்கள், டீக்கடைகள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படலாம் என்றும், அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும் எனவும், வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், மண்பாண்டம் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்யலாம் என்றும், மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்பொருட்களின் பழுது நீக்கும் கடைகள் செயல்படவும் அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை சலூன்கள், டீக்கடைகள், அழகு நிலையங்கள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் உள்ளிட்ட கடைகளும், அரசு பூங்காக்கள் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள விளையாட்டு திடல்களும் திறக்கப்பட்டன. இதில் சலூன் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டன.
மேலும் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களில் பொதுமக்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தபடியும் நடைபயிற்சி மேற்கொண்டனர். ஆனால் விளையாட்டு திடல்களில், யாரையும் விளையாடவும், பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதிக்கவில்லை.
இதேபோல் செல்போன் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கண்கண்ணாடி கடைகள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட்டன. இங்கு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கி சென்றனர்.கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால், சாலைகளில் வழக்கம்போல் பொதுமக்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றதை காண முடிந்தது.
மேலும் கடலூர் நகரில் வண்டிப்பாளையம் சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பல வாரங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
மாவட்டத்தில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி அளிக்கப்படாததால், அவை அனைத்தும் மூடப்பட்டிருந்தன.