மயிலாடுதுறையில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. 1½ ஆண்டுகளில் கட்டுமான பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டத்தை பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் 28-ந் தேதி உதயமானது. மயிலாடுதுறை மாவட்டத்துக்கு என தனியாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும், மற்ற அனைத்து துறைகளும் நாகை மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் தான் இதுவரை இயங்கி வருகிறது. மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வேளாண்மைத்துறை புதிய கட்டிடத்தின் மாடியிலும் தற்போது இயங்கி வருகின்றன.
மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட உடன் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு தேவையான இடங்களை வழங்குவதாக தருமபுரம் ஆதீனம் ஒப்புதல் அளித்தார். அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இடம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.சட்டசபை தேர்தல் வந்ததால் கலெக்டர் அலுவலகத்துக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மயிலாடுதுறையில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கான கட்டுமான பணிகளுக்காக திருச்சி பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு சார்பில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் டெண்டரை வெளியிட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்த படிவங்கள் வருகிற 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 22-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், பணிகளை 18 மாதங்களுக்குள் (1½ ஆண்டுகள்) முடிக்க வேண்டும் என்றும் அந்த டெண்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மகிழ்ச்சி: மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை 1½ ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டு, டெண்டர் வெளியிட்டு இருப்பது மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.