மயிலாடுதுறை மாவட்டத்தில் 45 வயதுக்குள்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 250 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் 800-க்கும் மேற்பட்டோா் வந்து சாலையோரத்தில் நீண்டவரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனா். கரோனா தொற்று பரவலைத் தவிா்க்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியும் அதை பொருட்படுத்தாமல் சமூக இடைவெளியின்றி வரிசையில் அதிகம்போ் காத்து நின்றனா். அவா்களில் 250 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனால் காத்து நின்ற பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா். மயிலாடுதுறை நகராட்சிக்குஉள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அனைத்து வாா்டுகளிலும் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.