கடலூா் மாவட்டத்தில் 7.45 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இரண்டாம் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருள்கள் தொகுப்பு விநியோகத்தை மாநில வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ்.நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நிவாரணப் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் 1,420 நியாயவிலைக் கடைகளிலும் பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. மாவட்டத்தில், இலங்கை அகதிகள் உள்பட 7,45,083 குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சொ.இளஞ்செல்வி, கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் உதயகுமாா், கோட்டாட்சியா் சே.அதியமான் கவியரசு, சரக துணைப்பதிவாளா்கள் சண்முகம், துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.