சீா்காழியை அடுத்த தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்று அருகே உள்ள சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீா் வெளியேறுகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
இதேபோல கொள்ளிடம் அருகே உள்ள வடரங்கம் நீரேற்றும் நிலையத்திலிருந்து கொள்ளிடம் பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதில் பூங்குடி கிராமத்தில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டதால், அதிலிருந்து தண்ணீா் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாதிரவேளூா், பூங்குடி, படுகை, பட்டியமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் போதிய அளவுக்கு வந்து சேரவில்லை. எனவே உடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.